ஏழைகளின் உணவாக இருந்த சிறுதானியங்கள் இன்று
வசதியானவர்களின் உணவாக மாறிவிட்டது. வறட்சியை
தாங்கி வளமாக வளரக்கூடிய மழைவாழ் மற்றும் கிராம
மக்களின் வளமான வாழ்வாதாரமாக விளங்கிகொண்டிருந்த
வரப்பிரசாதம் இன்று அயல்நாடுகளுக்கு டன் டன்னாக ஏற்றுமதியாகி
அரிசியைவிட விலையேற்றம் அடைந்துள்ள சிறுதானியங்கள்
மற்றும் கொள்ளு போன்றவை நம்கையில் இருக்கும் அருமருந்துகள்
ஆனால் கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நாம் நெய்யை
தேடுகிறோம். உடல்பருமனை குறைப்பதற்கு பலரும் பலமுயற்சிகள்
பல லட்சங்கள் செலவு செய்வதை நாம் பார்த்துக்கொண்டுதான்
இருக்கிறோம். ஆனால் நம் முன்னோர்கள் நமக்கு பல விடயங்களை
நமக்கு சொல்லிச்சென்று இருக்கின்றனர்.
” இளைத்தவனுக்கு எள்ளு
கொழுத்தவனுக்கு கொள்ளு”
என்று பழமொழிக்கேற்ப நாமும் நடந்துகொள்ளவேண்டும் என்றால்
எப்படி சாப்பிடுவது? எள்ளை அதிகமாக நாம் சுவையோடு
எடுத்துக்கொள்ள பலவழிகள் உண்டு. ஆனால் கொள்ளு. இதை
அதிகமாக எவ்வாறு எடுத்துக்கொள்வது? என்பதுதானே உங்கள்
கேள்வி என் சகோதர சகோதரிகளின் நலன் கருதி இப்பொழுது
நாம் கொள்ளு தோசை எப்படிச்செய்வது என்பதை பார்ப்போம்
கொள்ளு தோசை
தேவையான பொருட்கள்
சிவப்பு நிறக்கொள்ளு 3 கப்
பச்சரி 1 கப்
தனியா 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் 2 அல்லது 3
உப்பு தேவையான அளவு
எண்ணெய் சுடுவதற்கு
செய்முறை
கொள்ளை
முதல் நாள் இரவே கழுவி ஊறவைக்கவும், பச்சரியை
அரைப்பதற்கு 2 மணி நேரம் முன்பாக ஊறவைக்கவும் கொள்ளு, பச்சரியுடன், தனியா, பச்சைமிளகாய் சேர்த்து அரைத்து உப்பு போட்டு கரைத்து வைக்கவும், பின் 15 முதல்20 நிமிடம் கழித்து தோசை செய்யவும்.
பூண்டு வாடை பிடித்தவர்கள் பூண்டையும் இதனுடன் சேர்த்துக்கொள்ளவும். (சேர்த்தால்தான் சுவையாக இருக்கிறது)
இதுபோன்ற உணவெல்லாம் நானும்என் மகனும் விரும்பி சாப்பிடுவோம். ஆனால் அப்பாவுக்கும் மகளுக்கும் கொஞ்சம் கஷ்டம்தான்
ஆனால் இன்று எனது மகள்
மிகவும் விரும்பி சாப்பிட்டுக்கொண்டே அம்மா நல்லா இருக்குள்ள என்றாள். ஆமாம் சினேகா இது குதிரைக்கு மிகவும் பிடிக்கும் என்றேன். அடிப்பதற்காக துரத்திக்கொண்டே உனக்கு ரொம்பதாம்மா கொழுப்பு என்றாள். அதனால் தாம்மா இந்த தோசை மிகவும் உனக்கு பிடித்திருக்கின்றது என்று சொல்லிக்கொண்டே ஒரு மகிழ்ச்சியான மனநிறைவான சிற்றுண்டியோடு அன்றைய இரவு தூங்கச்சென்றோம்.
அனைவரும் செய்து சாப்பிடுவீர்கள் என நம்புகிறேன்.
கொள்ளை சுண்டலாக எடுத்தால்கூட சிறிதளவுதான் எடுத்துக்கொள்ள இயலும். ஆனால் இவ்வாறு சாப்பிடும்போது இரண்டு அல்லது மூன்று தோசை பூண்டு சட்னியோடு சாப்பிட் சுவையாகவும் பயனுள்ளதாகவும். இருக்கும் உடல் பருமனைக்குறைக்க இது நல்ல ஒரு தீர்வாகும் ,
வாரத்திற்கு இருமுறை கொள்ளு உண்டால் கொழுப்பை குறைத்து உடல் நலம் காக்கும்.
இதுபோல் சிறுதானியங்களை உணவில் நாள்தோறும் சேர்த்து
கொள்வது பல நோய்களுக்கு அருமருந்தாகும்.
நாங்கள் ஏதாவது ஒன்றை நாள்தோறும் உணவில் சேர்த்துக
கொள்கிறோம்.